Friday 2 May 2014

நீ எங்கே என் அன்பே - திரை விமர்சனம்

நயன்தாரா அதிரடியாக நடித்திருக்கும் திரைப்படம் "நீ எங்கே என் அன்பே". காதல் நாயகியாக மட்டும் பார்க்கப்பட்ட நயன்தாரா இந்த படத்தில் ஆக்சன் கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்தில் பசுபதி, வைபவ் போன்ற பிரபல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் IT யுவதி நயன்தாராவின், காதல் கணவர் ஹர்ஷவர்தன் ரானே இந்தியாவில், ஐதராபாத்தில் தங்கி ஒரு IT Company-ல் வேலை பார்க்கிறார்.
nee-enge-en-anbe-thirai-vimarchanam



ஒருநாள், திடீரென காணாமல் போகும் அவரைத் தேடி ஐதராபாத் வரும் நயன், கணவரை காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கிறார்.

கணவர் தங்கிய லாட்ஜிலேயே தங்கி, ஐதராபாத் போலீஸில் பணிபுரியும் தமிழர் வைபவ் உதவியுடன் காணாமல் போன கணவனைத் தேடுகிறார்.

இந்நிலையில் ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி பசுபதி, நயன் வருவதற்கு சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணம், நயனின் காதல் கணவர் ஹர்ஷவர்தன் ரானே தான் என்று கூறுவதோடு, நயனின் கணவர், நயன் நம்புவது போல் இந்து அல்ல ஓர் இஸ்லாமிய இளைஞர் என்னும் குண்டையும் தூக்கி போடுகிறார்.

அதை ஆரம்பத்தில் நம்ப மறுக்கும் நயன், ஒருகட்டத்தில் உண்மை உணர்ந்து, ஒட்டுமொத்த காவல் துறைக்கும் முன்னதாக தன் காதல் கணவரை கண்டுபிடித்து, அவரை கண்டிப்பதும், தண்டிப்பதும் தான் ''நீ எங்கே என் அன்பே'' திரைப்படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான கதை, களம் எல்லாம்!

நயன்தாரா, பூ ஒன்று புயலானது... என்பதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்து, க்ளைமாக்ஸில் தன்னையும், நாட்டையும் நம்ப வைத்து ஏமாற்றிய காதல் கணவனை போட்டுதள்ளும் காட்சிகளில் வெளுத்து கட்டி இருக்கிறார்.

கல்லானாலும் கணவன் பார்மாலிட்டிசெல்லாம் இதில் இல்லை. நாட்டுக்காக பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்ற நியதி இந்த படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

கோபம் வந்தாலே மயங்கி விழுந்து விடும் கேரக்டரான நயன், இப்படத்தின் பாத்திரங்களில் ஒன்றாக படம் முழுக்க பவனி வரும் அம்மனின் அவதாரமாக தன்னை கருதாமல் கருதிக்கொண்டு, இறுதியில் பத்திரகாளியாக பளிச்சிடுவது 'நீ எங்கே என் அன்பே' படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது என்றால் மிகையல்ல..

கணவனைத்தேடி ஐதராபாத் என்ட்ரியில் ஆகட்டும், எதிராளியின் துப்பாக்கி முணையில் 'எஸ்' ஆவதிலாகட்டும், போலீஸ்காரர்களிடம் எகிறுவதிலாகட்டும், ஆதரவற்ற லாட்ஜ் சிறுவனிடம் காட்டும் அன்பிலாகட்டும், தன்னிடம் பரிவுகாட்டும் போலீஸ் வைபவிடம் காட்டும் பாசத்திலாகட்டும், அனைத்திலும் நம்மை சீட்டோடு சேர்த்து கட்டி போட்டுவிடும் நயனின் நடிப்பு 'வாவ்' சொல்ல வைத்து விடுகிறது!

வைபவ் ரெட்டியின், நயன் மீதான ஒருதலைக்காதல், அல்லது ஒருவித பரிவு, ஸ்பெஷல் போலீஸ் பசுபதியின் முரட்டுத்தனம், நயன்தாராவையும், படம்பார்க்கும் நம்மையும் நம்ப வைத்து கழுத்தறுக்கும் ஹர்ஷவர்த்த ரானேவின் நடிப்பு எல்லாம் பக்காவாக இருக்கிறது பலே, பலே!

மரகதமணியின் மிரட்டும் இசை, விஜய் சி.குமாரின் மிளிரும் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ஒற்றை பெண்ணால் இத்தனையும் முடியுமா.? எனும் கேள்வி எழுந்தாலும், சேகர் கம்முலா, எண்டமூரி வீரேந்திரநாத்தின் எழுத்திலும், சேகர் கம்முலாவின் இயக்கத்திலும், ''நீ எங்கே என் அன்பே'' - நயன் ரசிகர்களுக்கு அபாரம், ஆச்சர்யம்!!

நன்றி: தினமலர் திரைவிமர்சனம். 

0 comments

Post a Comment