Saturday 3 May 2014

ஒரு கிராமமே காலி..! ஆப்கானிஸ்தான் நிலச்சரிவு அவலம்..! குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுப்பு..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி ஒரு கிராமமே புதையுண்டு போனது. குறைந்தது 2 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்தனர். குவியல், குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.

நிலச்சரிவு

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் தஜிகிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகியநாடுகளின் எல்லைப்பகுதியில் பதக்ஷான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது.
இந்த மாகாணத்தில் உள்ள பரீக் என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரண்டு மசூதிகளில் ஏராளமான முஸ்லிம்கள் கூடி தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பலத்த ஓசையுடன் அந்தக் கிராமமே புதைந்து போனது.

மசூதிகள், வீடுகள் இன்ன பிற கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப்போனது. எங்கு பார்த்தாலும் ஒரே மரண ஓலம்தான் கேட்டது.

குவியல் குவியலாக பிணங்கள்

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 350 பேர் பலியாகி விட்டதாக ஐ.நா. சபை முதல் கட்ட தகவல் வெளியிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர், நெருக்கடி காலப்பணியாளர்கள் அங்கு விரைந்தனர்.

மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து அங்கு குறைந்தது 2,100 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக பதக்ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் நவீத் போரோட்டன், ‘ரெயிட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘பரீக் கிராமத்தில் நேரிட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 2,100 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்’’ என கூறினார்.

இந்தக் கிராமத்தில் ஏராளமானோர் காணாமல் போய் விட்டனர்.

அதிபர் இரங்கல்

நிலச்சரிவில் சிக்கியவர்கள் யாராவது உயிரோடு கிடைத்து விட மாட்டார்களா என்ற ஏக்கத்துடனும், தவிப்புடனும் உள்ளூர் மக்களும் மீட்புப்பணியில் தங்களை இணைத்துக்கொண்டு, மண்வெட்டி கொண்டு இடிபாடுகளை தோண்டிப்பார்ப்பது நெஞ்சை உருக்கும் செயலாக அமைந்துள்ளது.

 மீட்புக்குழுக்கள் அந்தக் கிராமத்தில் தொடர்ந்து முழுவீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் குவியலாகிவிட்ட பாறைகள், மண் குவியல்கள் மத்தியில் தேடுதல் பணி நடந்து வருகிறது.

நிலச்சரிவில் பரீக் கிராமமே புதைந்து போய், 2,100 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு நாட்டின் அதிபர் ஹமீது கர்சாய் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தார்.

மீண்டும் நிலச்சரிவு?

இதற்கிடையே ஐ.நா. சபை இந்த துயரம் குறித்து நேற்று கருத்து வெளியிட்டது. அப்போது அது, ‘‘வெள்ளிக்கிழமை நடந்த நிலச்சரிவில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனர்.

அவர்கள் மீது தான் இப்போது நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்தி வருகிறோம்’’ என கூறியது. இந்த நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

0 comments

Post a Comment