Saturday 12 April 2014

மலேசிய விமானம் கடத்தப்பட்டதா? கடலில் விழுந்ததா? உண்மையில் நடந்ததென்ன?

மலேசிய விமானம் பயணிகளுடன் மாயமாகி 30 நாட்களுக்குப் பிறகும் அதுகுறித்த பரபரப்பு இன்னும் குறையவில்லை.  சமீபத்திய ரஷ்ய உளவுத்துறை தகவல்படி அது ஆப்கனிஸ்தான் நாட்டில் கடத்தி வைப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

உண்மையில் நடந்தென்ன?

இதுவரைக்கும் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியப் பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்ற யூகத்தின் அடிப்படையிலேயே, இதுவரை விமானத்தை தேடி வருகின்றனர்.



ஆனால் விமானத்தினுடைய பாகங்களையோ, அதில் பயணித்தவர்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை. உலக நாடுகளில் அதிநவீன கப்பல்கள், விமானங்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு தேடிக்கொண்டிருந்தாலும், விமானத்தைப் பற்றிய உறுதிப்படுத்தபட்ட  தகவல்கள் எதுவும் இதுவரைக்கு கிடைக்கவில்லை.

இதற்கிடையில், ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் பல்வேறு தகவல்களையும், கற்பனை கட்டுக் கதைகளையும் விட்டு, தங்களின் அன்றைய டார்கெட்டை உயர்த்திக்கொண்டன.

உண்மையில் நடந்ததென்ன? விமானத்தை கண்டுபிடித்தால் மட்டுமே, அதைப் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கும்.

நேற்றைய ரஷ்ய ஊடகச் செய்தியொன்றில் விமானம் கடலில் விழவில்லை. அது ஆப்கன் நாட்டிற்கு கடத்தப்பட்டது என்றும், அதில் பயணித்தவர்களை ஏழு குழுக்களாக பிரித்து, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறை வைத்து கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி கலந்த செய்தி ஒன்றினை வெளிப்படுத்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல்கள் மலேசிய அரசுக்கு நன்கு தெரியும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்களும் நம்பும்படி இல்லை.

மலேசிய அரசுக்கு உண்மைத் தெரியும் பட்சத்தில், அது ஏன் உலக நாடுகளின் உதவியைக் கோர வேண்டும்? அப்படி மலேசிய அரசுக்கு உண்மைத் தெரிந்திருந்து உலக நாடுகளை முட்டாளாக்க நினைப்பதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி மலேசியா அரசுக்குத் தெரியாதா?

malasiya-vimanam-kadathapatttha-kadalil-vilunthatha

இந்த வகையில் யோசித்தால் மலேசிய அரசிற்கு உண்மையிலேயே விமானம் மாயமானதைப் பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் தெரியாது என்று நம்பத் தோன்றுகிறது. அதுதான் உண்மையாகவும் இருக்கும்.

விமானத்தை பல்வேறு பாகங்களாக பிரித்துவிட்டனர் என்கின்றனர். அப்படியென்றால் அந்த விமானத்தின் கருப்பு பெட்டி சிக்னல்கள் அந்நாட்டிலிருந்தே வந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. கடலில் கருப்பு பெட்டிக்கான சிக்னல் கிடைத்துள்ளன என்று தேடுதல் குழுவின் இரண்டு கப்பல்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்தியை வைத்து ஆராயும்பொழுது "மலேசிய விமானம் கடலில் விழுந்ததாக" கருதுவது சரியாகத்தான் இருக்கும்.

எத்தனையோ நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கும் உலக நாடுகள்,  சாதாரண ஒரு விமானத்தை கண்டுபிடிக்க முடியாத அசாதாரண நிலையை என்ன வென்று சொல்வது?

ஆழ்கடலில் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் உலக நாடுகள், சாதாரண இந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியாது போன ரகசியம்தான் என்ன?

இந்த கேள்வியின் அடிப்படையில் வைத்து யோசித்துப் பார்த்தால் ரஷ்ய உளவுத்துறை வெளியிட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மையும் இருக்குமோ? என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது. ஆனால் அதில் எந்தளவிற்கு உண்மை இருக்குமென்று தெரியவில்லை.

malasiya-vimanam-kadathapatttha-kadalil-vilunthatha


இதுபோன்ற உறுதிப்படுத்த இயலாத தகவல்களால் பொதுமக்களும், விமானப் பயணிகளின் உறவினர்களுமே அலைகழிக்கப்படுகிறார்கள் என்பதே பட்டவர்த்தமான உண்மை.

எப்படி நடந்திருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் அதில் பயணம் செய்த பயணிகளும், அவர்களைச் சார்ந்த குடும்பமும்தான்.

எத்தனையோ கோர விபத்துக்களையும், போர்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், இயற்கை சீற்றத்தால் கொத்து கொத்தாக மடிந்த மனித உயிரிழப்புகளையும் சில நாட்களில் மனது ஏற்றுக்கொண்டுவிட்டது.

ஆனால் மலேசியா விமானம் MH370 மாயமானதையும், அதன் பின்னணியில் உள்ள தகவல்களையும் அறிய மட்டும் இன்னும் மனது ஏங்கிக்கொண்டுதான் உள்ளது.

குறிப்பாக அதில் பயணம் செய்த உறவினர்களின் மனம் இன்னும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். ஒரு நாள் வந்து அவர்களை சந்தித்து நான் உயிரோடு திரும்பி வந்து விட்டேன் என்று மகிழ்ச்சி பொங்க ஆரத் தழுவுவார்கள் என்று காத்திருக்கிறது.

அவர்களின் மன ஏக்கத்தை, தீர்த்து வைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்று வெளிவரும்?

விமானம் மாயமானதிலிருந்து என்னதான் நடந்திருக்கும்? உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவருமா? இல்லை விமானத்தைப் போலவே மாயமானதாகவே போய்விடுமா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

0 comments

Post a Comment