Monday 21 April 2014

பேட்டிங்: அசத்தல் பந்து வீச்சு: அபாரம் ஃபீல்டிங்: அட்டகாசம்

பாய்ந்து சென்று பந்தை கேட்ச் செய்கிறார் டூ பிளஸ்ஸிஸ்
டெல்லி அணிக்கு எதிரான 7-வது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சென்னை தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்டிங், பந்து வீச்சு மட்டுமல்லாது ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக டூ பிளஸ்ஸிஸ் மற்றும் ரெய்னா "டைவ்' செய்து பிடித்த கேட்ச்சுகள் ரசிகர்களை குதூகலிக்க வைத்தன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை அணியில் டுவைன் பிராவோ, ஆஷிஸ் நெஹ்ரா, பவன் நெகி நீக்கப்பட்டனர்.
chennai-super-kings-vetri-delhi-parithabam

அவர்களுக்குப் பதிலாக ஹில்ஃபெனாஸ், மிதுன் மன்ஹாஸ் மற்றும் ஈஷ்வர் பாண்டே வாய்ப்பு பெற்றனர். டெல்லி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பிரண்டன் மெக்கல்லம் - டுவைன் ஸ்மித் ஜோடி சென்னை அணிக்குத் தொடக்கம் தந்தது.

கடந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த மெக்கல்லம் இந்த முறை 9 ரன்கள் எடுத்திருந்தபோது உனத்கட் பந்தில் பர்னலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த ரெய்னா வழக்கம்போல தன் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இருப்பினும் 10-வது ஓவர் வரை ரன் ரேட் மந்தமாகவே இருந்தது.

நதீம் வீசிய 11-வது ஓவரில் ரெய்னா சிக்ஸர் விளாசினார். ஆனால், 29 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணியின் முன்னாள் வீரரான முரளி விஜய் 12-வது ஓவரை வீசினார். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரெய்னா அந்த ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார்.

41 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 56 ரன்கள் அடித்த ரெய்னா, நீஷம் பந்தில் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய தோனி, டூ பிளஸ்ஸிஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடிக்கு மாறினார். சிறிது நேரமே நின்றாலும் பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்க விட்டார்.

அவருடன் ஒத்துழைத்து ஆடிய பிளஸ்ஸிஸ் 24 ரன்களில் நடையைக் கட்டினார். உனத்கட் வீசிய 19-வது ஓவரில் பவுண்டரி விளாசிய கையோடு அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து தோனி ஆட்டமிழந்தார்.

தோனி 15 பந்துகளில் 32 ரன்கள் (2 பவுண்டரி, 2 சிக்ஸர்) அடித்தார். அடுத்து களம்புகுந்த ஜடேஜா வந்த வேகத்தில் ஒரு சிக்ஸரை பறக்க விட்டார். ஆனால், இந்த ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

வைடு சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட்டைப் பறிகொடுத்தார் ஜடேஜா.

கடைசி ஓவரில் மன்ஹாஸ் 2 பவுண்டரி அடித்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.

டெல்லி பேட்டிங்: அடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.

மயங்க் அகர்வால் 2 ரன்களிலும், முரளி விஜய் 11 ரன்களிலும், மனோஜ் திவாரி டக் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் போராடிய தினேஷ் கார்த்திக் 21, டுமினி 15 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

மிடில் ஆர்டரில் நீஷம் தன் பங்குக்கு 22 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை.

டெல்லி அணி 15.4 ஓவர்களில் 84 ரன்களுக்கு சுருண்டது. இதனால், சென்னை 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அஸ்வின், ஜடேஜா, ஈஷ்வர் பாண்டே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரெய்னா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


டுவிட்டர் குரல்

சென்னை - டெல்லி அணி மோதலின்போது டுவிட்டரில் சிலர் வெளியிட்ட கருத்துகள்.

சார் இன்னும் பந்து லேண்ட் ஆகல... (தோனி சிக்ஸர் அடித்தபோது)

நல்லா கவனிச்சிங்களா மக்களே? முரளி விஜய் நம்ம டீம்ல (சென்னை) இருந்தப்போ கேட்ச் பிடிக்கல. இப்ப பாஞ்சு பாஞ்சு பிடிக்கிறாப்ல.

(டூ பிளஸ் விஜய் கேட்ச் செய்தபோது).

அபுதாபி பாலைவனத்தில் புழுதி பறக்க ஆரம்பித்து விட்டது. (தோனி விளாசல்கள்).

ஜடேஜா மேல துட்டு கட்டுனவங்க எல்லாம் வரிசையா ஆஜராகவும்.

முரளி விஜய் இன்னைக்கும் சுகர் மாத்திரை போட மறந்துட்டார் போல (அவர் ஆட்டமிழந்தபோது)

இந்த தினேஷ் கார்த்திக் நம்ம அஸ்வின அழ விடுவாரே.

பிறந்த வீட்டில் சொகுசாக இருந்தார், புகுந்த வீட்டுக்கு சென்றும் அந்த புத்தி மாறவில்லை. (முரளி விஜய் ஆட்டமிழந்தபோது)

எல்லா புகழும் நெஹ்ராவுக்கே. (ஆஷிஸ் நெஹ்ராவை அணியில் சேர்க்காததற்கு நன்றி தெரிவித்து)

அரசியல்வாதி பேச்சு வேணா "மிஸ்' ஆகலாம். ஆனா, டூ பிளஸ்ஸிஸ்கிட்ட கேட்ச் "மிஸ்' ஆகாது.

அபாரமான கேட்ச்களால் தாங்கள் ஒரு சாம்பியன் டீம் என்பதை நிரூபிக்கிறது சிஎஸ்கே. பேட்டிங், பவுலிங்குக்கு அப்பாலும் கிரிக்கெட் உள்ளது.

கடைசி மேட்ச் வரைக்கும் நெஹ்ராவ தண்ணி பாட்டில் சுமக்க விட்டா கப் நமக்குத்தான்.

கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே: டூ பிளஸ்ஸிஸ் கேட்ச் செய்த வேகம் பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாதது.

நல்லவேளை இதை நான் நேரடியாகப் பார்த்தேன். சில நேரங்களில் இதுபோன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்க இயலாது.

நாங்கெல்லாம் ஏற்கெனவே ஃபைனல்ல இருக்கோம். இது எங்களுக்கு பயிற்சி ஆட்டம் மாதிரி. (சென்னை அணி வெற்றி பெறும் தருணத்தில்).

இன்றைய ஆட்டம்

பஞ்சாப் - ஹைதராபாத்

இடம்: ஷார்ஜா,

நேரம்: 8 மணி, டிவி: சோனி சிக்ஸ்

0 comments

Post a Comment