Friday 25 April 2014

ஆஸ்திரேலியா விமானம் கடத்தப்பட்டதாக உலகம் முழுவதும் பரபரப்பு தொற்றியது..!

பாலி: ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக முதலில் தகவல்கள் பரவியது.

இதனையடுத்து சர்வதேச அளவில் பதட்டம் ஏற்பட்டதுடன், பல விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.

ஆனால் விமானம் கடத்தப்படவில்லை பாதுகாப்பாக பாலியில் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு தணிந்தது.

ஆஸ்திரேலியா, பிரிஸ்பனில் இருந்து வந்த விமானம் இந்தோனேசியாவின் பாலி நகரில் இறங்கவிருந்த நேரத்தில், கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.


விமானிகள் அறைக்குள் பயணி ஒருவர் செல்ல முயற்சி செய்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த பயணி, விமானிகள் அறைக்குள் நுழைந்து, விமானத்தை பாலியில் தரையிறக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் பேரில் விமானம் அங்கு தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் இது கடத்தும் திட்டமாக இருக்குமோ என்ற பெரும் பீதி கிளம்பியது.

பயணிகளுக்கு நிம்மதி: இது தொடர்பாக விர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விமானம் கடத்தப்படவில்லை என்றும், பயணி அளவுக்கதிகமாக குடித்து பைலட் அறைக்குள் வந்துள்ளார்.

இவர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளது. இதன் பிறகே பயணிகளுக்கு நிம்மதி ஏற்பட்டது.

கடந்த மார்ச் மாதம் எட்டாம் தேதி மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக இன்னும் மர்மம் விலகவில்லை.

இந்நிலையில் ஆஸி.,விமானம் கடத்தப்பட்டதாக தகவல் பரவிய போது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு , பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை சிறிது நிமிடம் ஏற்படுத்தி பின்னர் தணிந்தது.

0 comments

Post a Comment