Tuesday 13 May 2014

கோச்சடையான் பற்றிய புரளிகளை நம்ப வேண்டாம்; மே 23-ல் கட்டாயம் ரிலீஸ் என அறிவிப்பு

கோச்சடையான் பற்றிய புரளிகளை நம்பவேண்டாம். ஏற்கனவே அறிவித்தபடி மே 23 ம்தேதி கோச்சடையான் உலகெங்கிலும் ரிலீஸ் செய்யப்படும் என படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உடன் ஆர்.சரத்குமார், ஜாக்கி ஷேரோப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

kochadaiyan-may-23-release-aagaum
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.எஸ்.ரவிக்குமார் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தொகுப்பு – ஆண்டனி. ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலிப்பதிவை கவனித்திருக்கிறார். கலை: வேலு, நடனம்: சரோஜ்கான், சின்னி பிரகாஷ், ராஜுசுந்தரம், உடைகள் வடிவமைப்பு: நீத்தாலுல்லா, சண்டைப்பயிற்சி: மிராக்கிள் மைக்கேல். கிரியேட்டிவ் கன்ஸல்டண்ட்டாக ஆர்.மாதேஷ் பணியாற்றி உள்ளார்.

கோச்சடையான் படம் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவிருந்தது. கோச்சடையான் 3டி வடிவத்தில் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி உட்பட ஆறு மொழிகளில் தயாராவதால் தொழில்நுட்பக் காரணங்களினால் தேதியை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, மாற்று தேதியையும் தெளிவுபடுத்தி இருந்தோம். இந்நிலையில், சில பத்திரிகை மற்றும் இணையதளங்களில் கோச்சடையான் படத்தைப் பற்றி உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.

கோச்சடையான் திரைப்படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுவிட்டது. மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. 3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.

இது தவிர, ஏற்கனவே சுமார் 4000 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டநிலையில், சென்னையில் முன்பதிவு துவங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.

அதன் பிறகு மேலும் 2000 திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன் வந்துள்ளன. 3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டது.

ஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி அன்று வெளியாக தயார்நிலையில் உள்ளது.

ஈராஸ் இண்டர்நேஷனல் என்ற பெரிய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் படம் குறித்து வெளியான செய்திகள் தவறானவை. அவற்றை நம்ப வேண்டாம் என்றும், ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி கோச்சடையான் திரைப்படம் மே 23 ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம். என்று அந்த படத்தயாரிப்பு நிறுவனம் உறுதியாக அறிவித்துள்ளது.


0 comments

Post a Comment