Wednesday 30 April 2014

மலேசிய விமானம் தேடுதல் பணி முடிவுக்கு வந்தது

கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதியன்று வானில் பறந்த மலேசிய விமானம் சில மணி நேரங்களுக்குப் பிறகு மாயமானது.

வங்க கடலில் விழுந்த்தாக கருதப்பட்ட விமானத்தைத் தேடும் பணியில் பல்வேறு நாடுகளில் கப்பல்கள், விமானங்கள் ஈடுபட்டிருந்தன.

நவீன தொழில்நுட்ப கருவிகளின் மூலம் அதனுடைய கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணி வெகு நாட்களாக நடைபெற்று வந்தது.

எனினும் எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள வான்வழி விமானங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காணாமற்போன விமானம் குறித்த தீவிர வான்வழித் தேடல்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர இந்தியப் பெருங்கடலில் மையம் கொண்டிருந்த தேடுதல் கப்பல்களும் திரும்பத் தொடங்கியுள்ளன.

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா. இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய எட்டு நாடுகளின் விமானங்களும் 300-க்கும் மேற்பட்ட முறை விமானத்தின் உடைந்த பாகங்களைத் தேடும் பணியில் இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளன.

கடந்த மாதம் 18-ஆம் தேதியிலிருந்து 4.5 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மேற்பட்ட கடற்பரப்பில் தேடுதல் வேட்டையில் பலன் எதுவும் இல்லாத நிலையில் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலான விமானங்கள் இன்று சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று தேடுதல் ஒருங்கிணைப்பு மையத்தின் தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

எனினும் பெர்த்தில் ஆஸ்திரேலியாவின் பி-3 ஓரியன் விமானம் மட்டும் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, சீனா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த 14 கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன. இவையும் பெர்த் துறைமுகத்திற்குத் திருப்ப அனுப்பப்பட்டு அவற்றிற்கான எரிபொருள் நிரப்பப்படும் பணி நடைபெறும்.

இந்தக் கப்பல்களில் இருந்த ஊழியர் குழுக்களுக்கும் ஒய்வு அளிக்கப்படும். சில கப்பல்கள் மட்டுமே அந்தப் பகுதியில் நிலைநிறுத்தப்படும்.

மொத்தத்தில் எம்ஹெச்370 குறித்த வான்வழி மற்றும் கடற்பரப்பு தேடுதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


0 comments

Post a Comment