Sunday, 30 March 2014

கலப்பு திருமணம் செய்துகொண்ட 6 மாத கர்ப்பிணி பெண் கொலை

குடும்ப கவுரவம் காரணமாக கலப்பு திருமணம் செய்துகொண்ட பெண்ணை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. கூடப் பிறந்த சகோதரர்களே இப்பாதகச் செயலைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆறுமாத கர்ப்பிணி பெண் என்று பார்க்காமல் கூட, பத்து மாதம் சுமந்து பெற்றத் தாயே மகளை அழைத்து வந்து கொலைச்செய்ய சொல்லியிருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் கலப்பு திருமணம் செய்து, 6 மாத கர்ப்பமாக இருந்த பெண், கொலை செய்யப்பட்டு, சாக்கு மூடையில் கட்டி, புதைக்கப்பட்டார்.

aaru-matha-karpini-pen-kolai

அவரது உடலை போலீசார் தோண்டி எடுத்த போலீசார், அப்பெண்ணின் தாய், தம்பி, உட்பட 4 பேரை கைது செய்தனர். ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால். சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இவர், குடும்பத்துடன் உச்சிப்புளியில் குடியேறினார். இவரது மகள் வைதேகிக்கும், பக்கத்து வீட்டு ராஜேந்திரன் மகன் சுரேஷ் குமாருக்கும் காதல் ஏற்பட்டது. சுரேஷ்குமார் வேறு ஜாதி என்பதால், வைதேகிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர்.

இதையறிந்த காதல் ஜோடிகள், 2013 ஆக., 28 ல், மதுரை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து, அங்குள்ள மகளிர் போலீசில் சரணடைந்தனர்.

இருவரின் பெற்றோரை அழைத்து, போலீசார் சமரசம் பேசினர். வைதேகிக்கும், தங்களுக்கும் எந்த உறவுமில்லை என, எழுதி கொடுத்து விட்டு, அவரது பெற்றோர் ஊர் திரும்பினர்.

மதுரை திருப்பாலையில் உள்ள தனியார் மொபைல் போன் நிறுவனத்தில், விற்பனை பிரதிநிதியாக சுரேஷ்குமார் பணியாற்றினார். பெற்றோருக்கு பயந்த வைதேகி, சுரேஷ்குமாருடன் கேரளாவில் குடியேறினார்.

அங்கு சுரேஷ்குமார், கட்டட வேலை செய்தார். வைதேகி 6 மாத கர்ப்பிணி என்ற தகவலறிந்த அவரது தாய் வெங்கடேஸ்வரி, ""திருமணத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஊருக்கு வா '' என மொபைல் போனில் அழைத்தார். இதை நம்பிய இருவரும், கேரளாவிலிருந்து மார்ச் 16 ல், தேனி மாவட்டம் வீரபாண்டிக்கு வந்தனர்.

அங்கு சென்ற வெங்கடேஸ்வரி, வைதேகியை மட்டும் அழைத்துக்கொண்டு, அன்றிரவு ராமநாதபுரம் திரும்பினார். மார்ச் 17 ல், வைதேகியை தீர்த்துக்கட்ட, வெங்கடேஸ்வரியின் தம்பி பாக்யராஜ் தனது தேங்காய் நார் தொழிற்சாலையில் திட்டம் தீட்டினர்.

இதற்கு வாலாந்தரவை தர்மா, ரவீந்திராவை ஏற்பாடு செய்தார். அன்றிரவு 7:00 மணிக்கு தர்மா, ரவீந்திரன் டூவீலரில் வெங்கடேஸ்வரியின் வீட்டுக்கு சென்றனர். வைதேகியின் தம்பி விமல்ராஜ், அவர்களிடம் வீட்டை அடையாளம் காட்டி விட்டு, சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த வைதேகியை கொலை செய்து, உடலை சாக்கில் மூட்டையில் கட்டி, பாக்யராஜ் காரில் ஏற்றிக்கொண்டு, இரவு 9:00 மணிக்கு, குயவன்குடி சுனாமி குடியிருப்பில் இருந்து, ஆள் நடமாட்டமில்லா பகுதிக்கு சென்றனர்.

அங்கு வைகை ஆற்று கரையில் குழி தோண்டி, புதைத்தனர்.வெங்கடேஸ்வரியுடன் சென்ற, வைதேகியை காணவில்லை. அவரை ஆஜர் படுத்த வேண்டுமென, மார்ச் 21 ல் ஐகோர்ட் மதுரை கிளையில் சுரேஷ்குமார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவுபடி கேணிக்கரை போலீசார், வழக்கு பதிந்தனர்.

விசாரணையில் வைதேகியை கொன்று புதைத்தது தெரிந்தது. நேற்று, உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக வெங்கடேஸ்வரி,44, அவரது தம்பிகளான பாக்யராஜ் 31, ஜானகிராமன் 37, வைதேகியின் தம்பி விமல்ராஜ் ,21, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வெங்கடேஸ்வரியின் மற்றொரு தம்பி அழகர்சாமி, தர்மராஜன், ரவீந்திரன் மற்றும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் பிடிபட்டால் தான், வைதேகி எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தெரியவரும்.

கூலிப்படைக்கு ரூ.2 லட்சம் : ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை, குயவன்குடி, வழுதூர் பகுதியில் புறம்போக்கு நிலங்கள் ஏராளம் உள்ளன. இங்கு அடையாளம் தெரியாத பலர், கார்களில் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

வைதேகி உடல் புதைக்கப்பட்ட இடம் அருகே, 6 மாதங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத இளம்பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கேணிக்கரை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இந்த பெண் யார் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை.

காதலித்து, ஜாதி மாறி திருமணம் செய்ததால், குடும்ப கவுரவம் பாதிக்கப்படுவதாக கருதிய குடும்பத்தினர், வைதேகியை கொலை செய்ய, கூலிப்படைக்கு ரூ.2 லட்சம் வழங்கியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

கௌரவம் என்பது காசு பணமா? அப்படி காசு பணம் என்றால் கண்டவன் கையிலும் சென்று சேருகிறதே அது..? அப்படியென்றால் அந்த காசு பணத்தைவிட பெற்ற மகள் தரம் குறைந்துவிட்டாளா?

இக்கொலைச் செய்தவர்களுக்கும், கொலைக்கு காரணமாக இருந்தவர்களும் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

0 comments

Post a Comment