Wednesday 21 May 2014

குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் இன்று பதவியேற்கிறார்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று, பிரதமராக பதவியேற்ற பிறகு, குஜராத் மாநிலத்திற்கான முதல்வர் இடம் காலியாகியது.

அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி இருந்த நிலையில் 73 வயதான ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று அவர் பதவி ஏற்கிறார்.

குஜராத் மாநில புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் (73), தேர்வு செய்யப்பட்டார். புதன்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற கட்சிக்கூட்டத்தில் தலைவராக அவர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வியாழக்கிழமை (மே 22) அவர் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார்.

குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்னும் பெருமையை அவர் பெறுகிறார். இதன் மூலம் நரேந்திர மோடியின் 12 ஆண்டு கால முதல்வர் பணி முடிவுக்கு வருகிறது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து பிரதமர் பதவி வேட்பாளராகப் போட்டியிட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வருகிற 26-ஆம் தேதி அவர் நாட்டின் 15-வது பிரதமராகப் பொறுப்பேற்கிறார்.

இந்நிலையில் குஜராத் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதற்காக அவர் புதன்கிழமை காந்திநகர் வந்தார். மாநில ஆளுநர் கமலா பேனிவாலை புதன்கிழமை சந்தித்து, குஜராத் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை மோடி அளித்தார். மேலும், எம்எல்ஏ பதவியையும் மோடி ராஜிநாமா செய்தார்.

இதனிடையே புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக குஜராத் மாநில பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம், காந்திநகரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி, குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், மோடியின் நண்பருமான அமித் ஷா, பாஜக பொதுச் செயலாளர் தாவர் சந்த் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குஜராத் முதல்வர் பதவிக்கு ஆனந்தி பென்னின் பெயரை மாநில விவசாயத்துறை அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா முன்மொழிந்தார். அதனை அமித் ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனையடுத்து ஆனந்தி பென் படேல், குஜராத்தின் புதிய முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனந்த கண்ணீர்: புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்தி பென் படேல் பேசுகையில், அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் மல்கியது. அவர் கூறுகையில், "விவசாயியின் மகளான என்னை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ததற்காக நரேந்திர மோடி மற்றும் இதர பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியலில் பெண்கள் ஈடுபடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் எனக்கு வழிகாட்டியாக இருந்தனர். நரேந்திர மோடி, என்னை எப்போதும் ஊக்குவித்தார். மோடி, 21ஆம் நூற்றாண்டின் தலைவர் ஆவார். பிரச்னைகளையும் வாய்ப்புகளாக மாற்றும் சக்தி படைத்தவர் மோடி' என்றார்.

மோடி பாராட்டு: நரேந்திர மோடி பேசுகையில், "ஆனந்தி பென் படேலை தவிர வேறு யாரும், குஜராத் அமைச்சராக தொடர்ந்து 16 ஆண்டுகாலம் இருந்தது கிடையாது. 10 துறைகளை திறம்பட அவர் கையாண்டுள்ளார். அவரது ஆட்சியின்கீழ் மாநிலத்தின் வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும்' என்றார்.

மோடியின் நம்பிக்கைக்குரியவர்: குஜராத்தின் முதல்வராக பதவியேற்க இருக்கும் ஆனந்தி பென் படேல், நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரியவர். அவருக்கு வலதுகரம் போல் செயல்பட்டு வந்தவர்.

மோடிக்கு பிறகு குஜராத் முதல்வர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அப்பதவிக்கு ஆனந்தி பென் தேர்வு செய்யப்பட்டதற்கு, அவர் சார்ந்த சமூகத்தினர் குஜராத்தில் அதிகளவில் வசிப்பதும் காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனந்தி பென் படேலும், அவரது கணவர் மஃபத்பாய் படேலும், 1990ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு, ஆனந்தி பென் படேல் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 1987ஆம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றியபோது, அணையில் தவறி விழுந்த 2 மாணவிகளை தண்ணீரில் குதித்து காப்பாற்றியதற்காக ஆளுநரிடம் இருந்து அவர் விருது பெற்றுள்ளார். சிறப்பாக ஆசிரியர் பணி ஆற்றியதற்காகவும் பல்வேறு அரசு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

ஆரம்ப காலத்தில் பாஜகவில் மோடியுடன் இணைந்து ஆனந்தி பென் சாதாரண தொண்டராக பணியாற்றினார். பின்னர் படிப்படியாக கட்சியில் அவருக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டன.

2 முறை மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1998ஆம் ஆண்டு குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, கேசுபாய் படேல் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சரானார்.

பின்னர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, பேரழிவு மேலாண்மை, கல்வித்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.

0 comments

Post a Comment